1990-களில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு என்பது மிகவும் ஆரம்ப நிலையில் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக சில கல்லூரிகளே கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்புகளை கொண்டிருந்தன.
எனவே, 90 களில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பு என்பது மிக அரிதாகவே இருந்தது. பனிரெண்டாம் வகுப்பில் எதிர்பார்த்த அளவிற்கு அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்றாலும், அக்காலகட்டத்தில் அது ஒரு கௌரவமான நல்ல மதிப்பெண்ணையே பெற்றிருந்தான்.
உள்ளபடியே அவனுக்கு இது தான் படிக்க வேண்டும் என்கிற இலக்கோ, இலட்சியமோ அல்லது வேட்கையோ எதுவும் கொண்டிருக்கவில்லை. மதிப்பெண்ணுக்கு தக்கவாறு எது கிடைக்கிறதோ அதில் சேரலாம் என்ற பெரும்பாலான மாணவர்கள் நினைப்பது போலவே அவனும் இருந்தான்.
இன்று உள்ளது போல், மேல்நிலைக் கல்வி மதிப்பெண் மற்றும் நுழைவுத் தகுதி கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை பெரும் வாய்ப்பு அப்பொழுது இல்லை.
அனைவரும் தனியார் கல்லூரிகளையே சார்ந்து இருக்கவேண்டும்.
பொறியியல் கல்லூரிகளும் மிக குறைவு.
மேலும் தனியார் கல்லூரிகளில், மிக உயர்ந்த கல்வி கட்டணம், capitation fee அல்லது management fee என்கிற பெயரில் ஒரு பெரும் தொகை சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் தொலை தூரம் சென்று படிக்கவேண்டியிருந்தது. காரணம், பெரும்பாலான கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் புறநகர் மற்றும் கிராமங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. புற நகர் மற்றும் அதை சார்ந்துள்ள கிராம மக்கள் 50 அல்லது 100 கிலோ மீட்டர் பயணம் செய்து படிக்கவேண்டியிருந்தது.
இதன் விளைவாக பெரும்பாலான மாணவர்களாலும் அவர்களது பெற்றோர்களாலும் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கவோ அல்லது குறிப்பிட்ட பாடப்பிரிவுகளைச் செய்வதற்கான ஆர்வத்தையும் உந்துதலையும் வளர்த்துக் கொள்ள முடியவில்லை.
அவனை பொறுத்தவரை, பொறியல் கல்லூரியாக இருந்தால் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை படிப்பு BBA, பேங்க் மேனேஜ்மென்ட் படிக்கலாம் என்பதே அவனது அப்போதைய எண்ணமாக இருந்தது.
சென்னை ப்ரெசிடெண்சி காலேஜ், பச்சையப்பா'ஸ் காலேஜ் மற்றும் இந்து கல்லூரி ஆகியவெற்றிக்கெல்லாம் கூட அவன் அப்ளிகேஷன் செய்து வைத்திருந்தான்.