1973-ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி, பரிதாபி வருடம், உத்திர நட்சத்திரமும், கன்னி ராசியுடன் கூடிய சுப தினத்தில், ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு அது ஐந்தாவது குழந்தை.
அந்த குழந்தைக்கு 'பாபு' என்று பெயரிடாமலேயே, 'பாபு' என்கிற பெயர் தன்னை சுற்றியுள்ளவர்களால் அழைக்கப்பட்டு அது அக்குழந்தையின் பெயராக அறியப்பட்டது. நான் குழந்தையாக வளர்ந்த ஊர் ஆந்திர எல்லையை ஒட்டியதாக இருந்ததால், பெரும்பாலும் ஆந்திர மற்றும் ஆந்திர எல்லையில் உள்ள ஆண் குழந்தைகளை அல்லது வளர்ந்த ஆண்களை, அவர்கள் பெயர் தெரியாவில்லை என்றால் பொதுவான பெயராக 'பாபு' என்று அழைப்பது வழக்கம். எனவே 'பாபு' என்ற பெயரை உள்ளடக்கிய . பெயர்கள் உள்ள தெலுங்கு பேசும் மக்களை இன்றும் மிக மிக அதிகமாக காணலாம். அதோடு மட்டும் அல்லாமல், சிறு குழந்தைகளை பொதுவாக 'பாபு" என்றே செல்லமாக அழைப்பார்கள். அதன் தாக்கமோ என்னவோ அவனுக்கு 'பாபு' என்ற சொல் அவனின் அண்டை அயலார்களின் மூலமாக தானாகவே ஒட்டிக்கொண்டது, பின்னாளில் அவனை பள்ளியில் சேர்க்கும்பொழுது 'வெங்கடேஷ்" என்ற பெயர் இணைத்து "வெங்கடேஷ் பாபு" என்று அவனது பெற்றோர்கள் பெயர் சூட்டினார்கள்.
"ஐந்தாவது பிள்ளை" நல்ல அதிர்ஷ்டம் உண்டு என்று அவன் அம்மாவே எண்ணியிருந்ததாலோ என்னவோ அவனின் ஜாதக குறிப்பை பத்திரபடுத்திவைக்கவில்லை மேலும் எதிகாலத்தை கணிக்க தேவை இல்லை என்று எண்ணிஆர்வம் காட்டவில்லை.
"பையனுக்கு நல்ல வசீகர முகமும், பெரிய கண்களுடன், கலராக இல்லை என்றாலும் களையாக இருக்கிறன் " என்று கூறி திருஷ்ட்டி வைத்தவர்களும் உண்டு.
அப்பொழுதே "மீசை வைத்தால் எப்படி இருக்கும்" என்று கற்பனை செய்து மகிழ்ந்த பக்கத்துக்கு வீட்டு காரர்களும், உறவினர்களும் உண்டு.
பின்னாளில், கைரேகை, மற்றும் ஓலை சுவடி ஜோதிடம் பார்த்த பொது
பையனுக்கு "கன்னி" ராசி, "புதன் " அதிபதி. வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரகாசமாக இருக்கும் என்று வேறு சொல்லிவைத்திருந்தார்கள்.
இன்று அவன் முன் யாரேனும், ஏன் அந்த எல்லாம் வல்ல இறைவனே அவன் முன் தோன்றி ஏதேனும் வரம் கொடுப்பதாக இருந்தாலும், அவன் நிச்சியமாக தனக்கு கால ஓட்டத்தின் பின்னோக்கிய பயணம் (Time travel) செய்வதற்கான சக்தியையே கேட்பான். ஆம், அவன் மனது எப்போதும் அவனுடைய இளமைக்கால நாட்களான அதாவது 80 -களில் எவ்வாறு அவன் பெற்றோர் மற்றும் சகோதர சகோதிரிகளுடன், ஒரு குடும்பமாக எப்படி வாழ்ந்தார்களோ அப்படி மீண்டும் ஒருமுறை வாழ முடியுமா என்று அவன் மனதில் அவ்வப்பொழுது நினைத்துக்கொண்டிபவன். அது சாத்தியமா, உண்மையில் அப்படி 80-களில் அனைவரும் சந்தோஷமாக இருந்தார்களா என்று மூளையை கசக்கி யோசித்தால் இது அபத்தமாக தெரியும், ஆனால் உணர்வூபூர்வமாக எண்ணும்பொழுது அக்காலம் மிகவும் நன்றாக இருந்ததாகவே மனம் எண்ணுகிறது.
நவீன நாகரீகத்தில் வளர்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது ஒரு பைத்தியக்காரத்தனமான எண்ணம் அல்லது பேராசை என்றும் கூட சொல்லலாம், அனால் நிச்சயம் இது போன்ற ஆசை பலபேர் மனதிலும் இருக்கும்.
இதில் மிக பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், இன்றைக்கு நாம் அனுபவிக்கும் எந்த சொகுசு (அ ) ஆடம்பரமும் அன்றைக்கு துளி கூட இல்லை, இருப்பினும் ஏனோ அவன் மனம் அந்த பழைய வாழ்க்கையே பிடித்திருப்பதாக கருதிக்கொண்டிருந்தான். ஒரு குடும்பத்திற்குள்ளேயே, அதே காலகட்டத்தில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கும் இது போன்று தோன்றுமா என்று தெரியவில்லை , ஆனால் அவரவர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் அவர்கள் கடந்து வந்த வழக்கை பயணத்தை பொறுத்து இது வேறுபடலாம்.
அனால் இன்று அதுபோன்ற ஒரு வாழ்க்கை முறை சாத்தியமா என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் இன்றைய எதிர்பார்ப்புகளும், தேவைகளும் , பொறாமைகளும் மற்றும் தேவையற்ற (அ ) போலி உத்வேகங்களும் ஒவ்வொரு தனி மனிதனையும் ஆட்கொண்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு அங்கமாக ஒருவர் அறியாமலேயே நம் ஒவ்வொருவரையும் வியாபித்திருக்கிறது.
இதற்கு காரணம், ஒவ்வொரு தனி மனிதனும் எதோ ஒரு வகையில் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதை சார்ந்து ஒருவித அழுத்தத்தை உணர்ந்து கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒருவன் எப்பொழுதும் தன்னை யாருடனாவது ஒப்பீடு செய்துகொண்டே இருக்கிறான். அது மற்றவனை போன்றோ அல்லது அவனை விட ஒருபடி அல்லது பல படி பெரியதாக இருக்கவேண்டும் என்பதே பலருடைய இலட்சியமாக இருக்கிறது, அது ஒரு வீடோ, வாகனமோ அல்லது அசைய சொத்தாகவோ இருக்கலாம். அடுத்ததாக தாழ்வு மனப்பான்மையின் காரணமாக எழும் பொருந்தாத மேலாதிக்க எண்ணங்கள், சில நடைமுறைக்கு ஒவ்வாத உத்வேக பேச்சுகளாலும் (motivational speech) மற்றும் சிலரது ஈர்ப்பினாலும்(influenced) பலர் தொடர்ந்து நிர்பந்தத்திற்கு ஆட்கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுடைய நெருங்கிய உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, அண்டை அயலார்களாகவோ அல்லது அவர்களுடைய எதிரி என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களாலேயோ கூட இருக்கலாம். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதில் பெண்களும் விதிவிலக்கு அல்ல. இன்னும் சொல்லப்போனால் பெண்கள்தான் இதில் அதிகளவில் பாதிப்பு அடைகிறவர்களாகவும், தூண்டி விடுபவர்களாகவும், அதற்கு காரணகர்த்தாக்களாகவும் இருந்து கடும் மன உளைச்சலுக்கு அவர்களும் ஆளாகிறார்கள் அவர்களை சேர்ந்தவர்களையும் ஆட்படுத்துகிறார்கள் என்பது அவனுடைய பார்வையாக இருந்தது.
நிச்சயமாக, இது ஒவ்வொரு தனி மனித குணத்தின் அணுகுமுறையின் குறை என்று கூறமுடியாது, ஏனென்றால் இது ஒரு சமூக மாற்றத்தின், அதன் பரிணாமத்தின் பல பக்க விளைவுகளில் ஒன்றே.
அவனை பொறுத்தவரை, 1970 மற்றும் 80-களில் ஓரளவேனும் தனி மனித ஒழுக்கமும், குறைந்த பட்ச நேர்மையும், பொதுவெளியில் ஒரு தனி மனிதனுக்கு ஏதேனும் ஒன்று என்றல் துணிந்து தட்டி கேட்க ஒரு ஊரில் சிலராவது இருந்தார்கள் என்பது அவன் எண்ணம் . இன்று அவ்வாறு காண முடிவதில்லை. ஏனென்றால் வன்முறையும், நேர்மையும் முற்றிலுமாக தொலைந்துபோய் விட்டதாகவே அவன் நம்புகிறான். அப்படியே யாரேனும் சில தவறுகளையோ, நடக்கின்ற அநியாயங்களையோ கேட்க முற்பட்டால் அவர்கள் தாக்கப்படுவார்கள் அல்லது ஏதேனும் ஒரு வகையில் பழிவாங்கபடுவார்கள் என்று ஓரிரு அரசியல்வாதிகளை தவிர்த்து, சாமான்ய மக்கள் அதிகம் தலையிடுவதில்லை. அவ்வகையில் அன்றைய காலகட்டம் ஓரளவேனும் நியாயமாகவும், சமூகத்தில் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சமும் இருந்திருந்தது என்றே அவன் உறுதியாக நம்பினான்.
அந்நாட்களில், தனியார்மயம் என்பது அப்பொழுது மிக குறைவே. அதனால், அரசு பணியில் (Govt. Job) இருந்தவர்களுக்கு அவர்களின் உறவினர் மத்தியிலும் மற்றும் சமூகத்திலும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டது. அரசு பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற கேள்வியே அப்பொழுது கிடையாது. அனேகமாக அனைவருமே அரசு பள்ளியில் பயின்றனர். மிக திறமையான, தன்னலமற்ற ஆசிரியர்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் இருந்தனர். அவனும், அவனது சகோதர சகோதரிகளும் அரசு பள்ளிகளிலேயே உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி படிப்புகளை பயின்றார்கள், அதிலும் தாய் மொழியான தமிழ் மொழியில். அவன் நினைவுக்கு எட்டியவரை (நான்காம் வகுப்பு முதல்) அவன் எப்பொழுதுமே மாணாக்கர்களின் தரவரிசை அடிப்படையில் முதல் மூன்று இடங்களிலேயும், அனேகமாக ஒரு சில வகுப்பை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ( 12-ம் வகுப்புவரை ) வகுப்பு தலைவனாக (class leader) தொடர்ந்து பயணித்தான் என்பதை அவன் பின்னாளில் அவன் பால்ய கால நண்பர்கள் கூற கேட்டு ஆச்சர்யம் கொண்டான்.
படிப்பது என்பது என்றுமே அவனுக்கு கடினமாகவோ அல்லது சுமையாகவோ இருந்ததாக அவன் நினைத்தது இல்லை. படிக்கும் நேரத்தில் படிப்பதும், நினைத்த நேரத்தில் விளையாடவும், மணிக்கணக்கில் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவத்திற்கு ஏற்ற சூழ்நிலையும் அவனுக்கு அமைந்திருந்து என்றே சொல்லலாம். அருகாமையிலேயே விளையாட்டு பூங்கா மற்றும் சுற்றுலா தளம் இருந்ததாலும், மேலும் அவனுடைய இளைய சகோதரரே அவனுடைய கூட்டாளியாக இருந்ததாலும், வெளியில் சுற்றித்திரிவது என்பது அவனுக்கு அனுதினமும் மிக இயல்பாக வாடிக்கையாக இருந்தது. நாள் கணக்கில் அவன் வெளியிலேயே அலைந்து திரிந்திருக்கின்றான். சிறுவயதில் அருகிலுள்ள பூங்காவிற்கு தினமும் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் பகலில் சென்றுவிடுவான். அங்கு பலவித விளையாட்டுகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். பூங்காவின் பல பகுதிகளில் கிரிக்கெட், கபடி, கோலி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை பலதரப்பட்ட வயதினர்கள், ஆண் மற்றும் பெண்கள் உட்பட விளையாடிக்கொண்டிருப்பார்கள். இப் பூங்காவிலும், பள்ளி விளையாட்டு மைதானத்திலும் விளையாடுவதற்கும், விளையாட்டை வேடிக்கை பார்ப்பதற்கும் அவனும் அவன் சகோதரனும் சேர்ந்து மத்திய உணவையும் தவிர்த்து பல முறை மணிக்கணக்கில் வெளியில் திரிந்திருக்கிறார்கள்.
விளையாட்டை தவிர மாங்காய் மரத்திலிருந்து தோட்டகாரருக்கு தெரியாமல் மாங்காய் பறித்து தின்பது, தோட்டக்காரன் தொரத்தி வரும்பொழுது தலை தெறிக்க ஓடிச்சென்று 5 அடி உயரமுள்ள முள் வேலி கம்பி சுவர் ஏறி குதித்து, தப்பித்து ஓடுவது என்பதை ஒரு பெரிய சாகசமாகவே அவனும் அவன் நண்பர்களும் செய்துகொண்டிருந்தார்கள். அதில் பலமுறை அவன் சட்டை கிழிந்திருக்கிறது, பல முறை கால் மற்றும் கை முள் கம்பிகளால் கிழித்து இருக்கிறது. இது போன்ற சில ஆபத்து இருந்தாலும் சிறுவர்களுக்கே உரித்தான பயமறியா அலாதி பிரியம் அவனுக்கு இருந்தது. நாவல் பழமும், அருகிலுள்ள முந்திரி காட்டில் இருந்து முந்திரி பழம் பறித்து வருவது போன்று பல சிறு வயது சாகச பொழுது போக்குகளில் அதுவும் அடங்கும்.