இன்றைய தேதியில், அவன் முன் யாரேனும் அல்லது எல்லாம் வல்ல அந்த இறைவனே அவன் முன் தோன்றி ஏதேனும் வரம் கொடுப்பதாக இருந்தாலும், அவன் நிச்சியமாக தனக்கு கால ஓட்டத்தின் பின்னோக்கிய பயணம் (Time travel) செய்வதற்கான சக்தியையே கேட்பான். ஆம், அவன் மனது எப்போதும் அவனுடைய இளமைக்கால நாட்களான 1980 -களில் மீண்டும் அவன் பெற்றோர் மற்றும் சகோதர சகோதிரிகளுடன் அன்று எப்படி ஒரு நடுத்தர குடும்பமாக, எப்படி வாழ்ந்தார்களோ அப்படி மீண்டும் ஒருமுறை வாழ முடியுமா என அவன் மனம் அவ்வப்பொழுது நினைத்துக்கொண்டிபவன்.
நவீன நாகரீகத்தில் வளர்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது ஒரு பைத்தியக்காரத்தனமான எண்ணம் அல்லது பேராசை என்றும் கூட சொல்லலாம், அனால் நிச்சயம் இது போன்ற ஆசை பலபேர் மனதிலும் இருக்கும்.
இதில் மிக பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், இன்றைக்கு நாம் அனுபவிக்கும் எந்த சொகுசு (அ ) ஆடம்பரமும் அன்றைக்கு துளி கூட இல்லை, இருப்பினும் ஏனோ அவன் மனம் அந்த பழைய வாழ்க்கையே பிடித்திருப்பதாக கருதிக்கொண்டிருந்தான். ஒரு குடும்பத்திற்குள்ளேயே, அதே காலகட்டத்தில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கும் இது போன்று தோன்றுமா என்று தெரியவில்லை , ஆனால் அவரவர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் அவர்கள் கடந்து வந்த வழக்கை பயணத்தை பொறுத்து இது வேறுபடலாம்.
அனால் இன்று அதுபோன்ற ஒரு வாழ்க்கை முறை சாத்தியமா என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் இன்றைய எதிர்பார்ப்புகளும், தேவைகளும் , பொறாமைகளும் மற்றும் தேவையற்ற (அ ) போலி உத்வேகங்களும் ஒவ்வொரு தனி மனிதனையும் ஆட்கொண்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு அங்கமாக ஒருவர் அறியாமலேயே நம் ஒவ்வொருவரையும் வியாபித்திருக்கிறது.
இதற்கு காரணம், ஒவ்வொரு தனி மனிதனும் எதோ ஒரு வகையில் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதை சார்ந்து ஒருவித அழுத்தத்தை உணர்ந்து கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒருவன் எப்பொழுதும் தன்னை யாருடனாவது ஒப்பீடு செய்துகொண்டே இருக்கிறான். அது மற்றவனை போன்றோ அல்லது அவனை விட ஒருபடி அல்லது பல படி பெரியதாக இருக்கவேண்டும் என்பதே பலருடைய இலட்சியமாக இருக்கிறது, அது ஒரு வீடோ, வாகனமோ அல்லது அசைய சொத்தாகவோ இருக்கலாம். அடுத்ததாக தாழ்வு மனப்பான்மையின் காரணமாக எழும் பொருந்தாத மேலாதிக்க எண்ணங்கள், சில நடைமுறைக்கு ஒவ்வாத உத்வேக பேச்சுகளாலும் (motivational speech) மற்றும் சிலரது ஈர்ப்பினாலும்(influenced) பலர் தொடர்ந்து நிர்பந்தத்திற்கு ஆட்கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுடைய நெருங்கிய உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, அண்டை அயலார்களாகவோ அல்லது அவர்களுடைய எதிரி என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களாலேயோ கூட இருக்கலாம். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதில் பெண்களும் விதிவிலக்கு அல்ல. இன்னும் சொல்லப்போனால் பெண்கள்தான் இதில் அதிகளவில் பாதிப்பு அடைகிறவர்களாகவும், தூண்டி விடுபவர்களாகவும், அதற்கு காரணகர்த்தாக்களாகவும் இருந்து கடும் மன உளைச்சலுக்கு அவர்களும் ஆளாகிறார்கள் அவர்களை சேர்ந்தவர்களையும் ஆட்படுத்துகிறார்கள் என்பது அவனுடைய பார்வையாக இருந்தது.
நிச்சயமாக, இது ஒவ்வொரு தனி மனித குணத்தின் அணுகுமுறையின் குறை என்று கூறமுடியாது, ஏனென்றால் இது ஒரு சமூக மாற்றத்தின், அதன் பரிணாமத்தின் பல பக்க விளைவுகளில் ஒன்றே.
அவனை பொறுத்தவரை, 1970 மற்றும் 80-களில் ஓரளவேனும் தனி மனித ஒழுக்கமும், குறைந்த பட்ச நேர்மையும், பொதுவெளியில் ஒரு தனி மனிதனுக்கு ஏதேனும் ஒன்று என்றல் துணிந்து தட்டி கேட்க ஒரு ஊரில் சிலராவது இருந்தார்கள் என்பது அவன் எண்ணம் . இன்று அவ்வாறு காண முடிவதில்லை. ஏனென்றால் வன்முறையும், நேர்மையும் முற்றிலுமாக தொலைந்துபோய் விட்டதாகவே அவன் நம்புகிறான். அப்படியே யாரேனும் சில தவறுகளையோ, நடக்கின்ற அநியாயங்களையோ கேட்க முற்பட்டால் அவர்கள் தாக்கப்படுவார்கள் அல்லது ஏதேனும் ஒரு வகையில் பழிவாங்கபடுவார்கள் என்று ஓரிரு அரசியல்வாதிகளை தவிர்த்து, சாமான்ய மக்கள் அதிகம் தலையிடுவதில்லை. அவ்வகையில் அன்றைய காலகட்டம் ஓரளவேனும் நியாயமாகவும், சமூகத்தில் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சமும் இருந்திருந்தது என்றே அவன் உறுதியாக நம்பினான்.
அந்நாட்களில், தனியார்மயம் என்பது அப்பொழுது மிக குறைவே. அதனால், அரசு பணியில் (Govt. Job) இருந்தவர்களுக்கு அவர்களின் உறவினர் மத்தியிலும் மற்றும் சமூகத்திலும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டது. அரசு பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற கேள்வியே அப்பொழுது கிடையாது. அனேகமாக அனைவருமே அரசு பள்ளியில் பயின்றனர். மிக திறமையான, தன்னலமற்ற ஆசிரியர்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் இருந்தனர். அவனும், அவனது சகோதர சகோதரிகளும் அரசு பள்ளிகளிலேயே உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி படிப்புகளை பயின்றார்கள், அதிலும் தாய் மொழியான தமிழ் மொழியில். அவன் நினைவுக்கு எட்டியவரை (நான்காம் வகுப்பு முதல்) அவன் எப்பொழுதுமே மாணாக்கர்களின் தரவரிசை அடிப்படையில் முதல் மூன்று இடங்களிலேயும், அனேகமாக ஒரு சில வகுப்பை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ( 12-ம் வகுப்புவரை ) வகுப்பு தலைவனாக (class leader) தொடர்ந்து பயணித்தான் என்பதை அவன் பின்னாளில் அவன் பால்ய கால நண்பர்கள் கூற கேட்டு ஆச்சர்யம் கொண்டான்.
படிப்பது என்பது என்றுமே அவனுக்கு கடினமாகவோ அல்லது சுமையாகவோ இருந்ததாக அவன் நினைத்தது இல்லை. படிக்கும் நேரத்தில் படிப்பதும், நினைத்த நேரத்தில் விளையாடவும், மணிக்கணக்கில் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவத்திற்கு ஏற்ற சூழ்நிலையும் அவனுக்கு அமைந்திருந்து என்றே சொல்லலாம். அருகாமையிலேயே விளையாட்டு பூங்கா மற்றும் சுற்றுலா தளம் இருந்ததாலும், மேலும் அவனுடைய இளைய சகோதரரே அவனுடைய கூட்டாளியாக இருந்ததாலும், வெளியில் சுற்றித்திரிவது என்பது அவனுக்கு அனுதினமும் மிக இயல்பாக வாடிக்கையாக இருந்தது. நாள் கணக்கில் அவன் வெளியிலேயே அலைந்து திரிந்திருக்கின்றான். சிறுவயதில் அருகிலுள்ள பூங்காவிற்கு தினமும் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் பகலில் சென்றுவிடுவான். அங்கு பலவித விளையாட்டுகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். பூங்காவின் பல பகுதிகளில் கிரிக்கெட், கபடி, கோலி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை பலதரப்பட்ட வயதினர்கள், ஆண் மற்றும் பெண்கள் உட்பட விளையாடிக்கொண்டிருப்பார்கள். இப் பூங்காவிலும், பள்ளி விளையாட்டு மைதானத்திலும் விளையாடுவதற்கும், விளையாட்டை வேடிக்கை பார்ப்பதற்கும் அவனும் அவன் சகோதரனும் சேர்ந்து மத்திய உணவையும் தவிர்த்து பல முறை மணிக்கணக்கில் வெளியில் திரிந்திருக்கிறார்கள்.
விளையாட்டை தவிர மாங்காய் மரத்திலிருந்து தோட்டகாரருக்கு தெரியாமல் மாங்காய் பறித்து தின்பது, தோட்டக்காரன் தொரத்தி வரும்பொழுது தலை தெறிக்க ஓடிச்சென்று 5 அடி உயரமுள்ள முள் வேலி கம்பி சுவர் ஏறி குதித்து, தப்பித்து ஓடுவது என்பதை ஒரு பெரிய சாகசமாகவே அவனும் அவன் நண்பர்களும் செய்துகொண்டிருந்தார்கள். அதில் பலமுறை அவன் சட்டை கிழிந்திருக்கிறது, பல முறை கால் மற்றும் கை முள் கம்பிகளால் கிழித்து இருக்கிறது. இது போன்ற சில ஆபத்து இருந்தாலும் சிறுவர்களுக்கே உரித்தான பயமறியா அலாதி பிரியம் அவனுக்கு இருந்தது. நாவல் பழமும், அருகிலுள்ள முந்திரி காட்டில் இருந்து முந்திரி பழம் பறித்து வருவது போன்று பல சிறு வயது சாகச பொழுது போக்குகளில் அதுவும் அடங்கும்.
என் தந்தை ஒரு அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியராக இருந்தார். பலரது பார்வையில் அவர் மிக எளிமையானவராகவும், வீண் விவாதங்களை தவிற்பவராகவும், அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுவதை விரும்பாதவராகவும், ஓர் சிலருக்கு ஆலோசகராக மற்ற சிலருக்கு அமைதியான ஆனால் மிக கோபக்காரராகவும் அறியப்பட்டார். அவரிடம் எந்த ஒரு சூழ்நிலையையும், தனிப்பட்ட அல்லது தொழில் ரீதியாக எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் கையாளும் அசாத்திய திறமை கொண்டிருந்தார். அவர் மனதளவில் மிக திருப்தியான மனிதராக வாழ்ந்தார் என்றே கூறவேண்டும். " போதும் என்ற மனமே போன் செய்யும் மருந்து " என்கின்ற பழமொழிக்கேற்ப அவர் வாழ்ந்தார் என்றே எண்ணத்தோன்றுகிறது .
அவர் இயல்பிலேயே பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார். அவர் எப்படிப் இவ்வாறு பல திறமைகளை கற்றுக்கொண்டார், எங்கிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது என்பது போன்றவற்றை நான் எண்ணி இப்பொழுதும் வியந்துகொண்டிருக்கிறேன். பொறுமை, தன்முனைப்பு, தன்னம்பிக்கை, அசாத்திய தைரியம், விடாமுயற்சி ஆகியவற்றிற்கான சரியான உதாரணம் இவரிடம் இருந்து என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
இதை பிற்பகுதியில் விரிவாக விவரிக்கிறேன்.
அவரின் இளம் வயதில் எவ்வாறு இருந்தார் இன்று அறியக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியதில்லை ஏனெனில் அவரின் தந்தையோ அல்லது தாயாரோ (எனது தாத்தா மற்றும் பாட்டி) நான் பிறப்பதற்கு முன்னமே அவர்கள் இறந்திருந்தார்கள். என் தந்தையும் அவரின் பால்யகாலம் குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதில்லை.
நான் அறிந்தவரைக்கும், அவர் மிகுந்த தைரியசாலியாக இருந்தார். எந்த ஒரு அச்சமும் இல்லாமல், ஏதேனும் அரசு அலுவலக சம்பந்தப்பட்ட பிரச்னையோ அல்லது அரசு அதிகாரிகளின் மீதான தவறுகளோ என்றால் அது குறித்து அரசு மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க அவர் தயங்கியதில்லை. அரசு அலுவலக சம்பந்தமான படிவங்கள் பூர்த்தி செய்வது, அரசு ஊழியர்களின் சம்பள படி, ஊதிய உயர்வு சம்பந்தமான விவரங்களை தேவையானவர்களுக்கு விளக்கி உதவி செய்வது என்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.
தொழில் ரீதியாக (professioally) முதலில் அவர் ஒரு ஓவிய ஆசிரியர், பின்னர் அவர் ஆங்கிலம், வரலாறு மற்றும் பூகோள கூடுதல் பொறுப்பில் பணியாற்றியிருக்கிறார். தனக்கு கிடைத்த பணி மாறுதலை பிள்ளைகளின் பள்ளி படிப்பு தடை பட கூடாது என நிராகரித்தார் இதன் மூலம் அவரின் தலைமை ஆசிரியராக கூடிய பணி உயர்வு தடை பட்டது. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்பட்டதாகவோ அல்லது வருத்தப்பட்டோ நாங்கள் அறியவில்லை.
அவர் மிக தெளிவாக நமக்கு என்ன வேண்டும், நமக்கு எது சரியாக இருக்கும் என்று தெரிந்து வைத்திருந்தார் என்றே நினைக்கிறேன். பெரும்பாலான மக்கள் குழப்பத்தில் உழன்று கொண்டிருக்கும்பொழுது ஒரு சிலர் மட்டும் தனக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்து, வாழ்க்கையை நேர்மையாகவும் மிக தைரியமாகவும் வாழந்து கொண்டிருப்பதை இன்றும் நம்மால் காணமுடியும்.
இந்த கட்டுரை எழுதும்பொழுதுதான் நான் இன்னொன்றையும் உணர்தேன். அது என்னவென்றால் எனக்கு தெரிந்து என் அப்பா எண்களிடமோ அல்லது யாரிடமோ அநாவசியமாக பொய் சொல்லியதாகவோ அல்லது விளையாட்டுக்கேனும் பொய் சொல்லி சீண்டியதாகவோ என் நினைவு எட்டியவரை இல்லை.
அனால் இன்று நாம் நம் பிள்ளைகளுடன் அல்லது நம் பிள்ளைகள் நம்முடன் சகஜமாக அளவளாவது போல் அன்று இல்லை.
ஆனாலும் குடும்ப நிர்வாகம், பிள்ளைகளின் மீது கவனம், பிள்ளைகளின் நடவடிக்கை மீதான நேரடி கண்காணிப்பு என்பதில் அவர் எப்பொழுதும் உறுதியாக இருந்தார் அதை அவரின் 55 வயது வரை கடைபிடித்தார் என்று உறுதியாக சொல்வேன்.
வீட்டில் இருக்கும்பொழுது பெரும்பாலான சமயங்களில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியது, அனைவரும் ஒன்றாக அமர்ந்து டிவி பார்ப்பது என்பது மிக இனிமையான நினைவுகள். ஒவ்வொரு ஞாயிறு தோறும் மாலை ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படமும் மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் ஒளியும்-ஒலியும் நிகழ்ச்சியும் அப்போது மிகவும் பிரபலமானவையாகும். எங்கள் வீட்டில் டிவி வாங்குவதுக்கு முன், அருகில் டிவி வைத்துள்ளவர்களின் வீட்டிற்கு சென்று, அவர்கள் முன் பின் தெறியாதவர்களாயினும் அங்கு சென்று டிவி பார்ப்போம். அது ஒரு காலம். நான் சிறுவனாக இருந்தபோது, டிவி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஒரு சிலர் மட்டுமே அப்பொழுது டிவி வைத்திருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை முழுவதும் விளையாடிவிட்டு அப்படியே டிவி பார்க்க அருகிலுள்ள டிவி வைத்திருக்கும் ஏதேனும் ஒரு வீட்டிற்கு செல்வோம். சுமார் பத்து முதல் பதினைந்து சிறுவர்கள் வரை அவ்வாறு ஏதேனும் ஒரு வீட்டில் அமர்ந்து டிவி பார்த்த காலங்களும் உண்டு.
பின்னாளில், வீட்டில் உள்ள அனைவரும் (சில நேரங்களில் என் அம்மா உள்பட) ஒன்றாக அமர்ந்து டிவி-ல் கிரிக்கெட் போட்டிகளை காண்பது என்பது மிக மிக சுவாரஸ்யமான மற்றும் மறக்க இயலாத இனிமையான தருணங்கள்.
ஒரு நாள் பந்தயம் (One day match), உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (Work cup series) நடக்கும் சுமார் ஒரு மாத காலம் என்பது ஒரு இனம் புரியாத விழாக்கால மனநிலையே பெரும்பாலான மக்களிடம் இருக்கும். அதிலும் குறிப்பாக என் பெரிய அண்ணன் அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதிலும் மற்றும் நேர்முக வர்ணனையை ரேடியோவில் ஆரம்பம் முதல் போட்டி முடியும் வரை மிக சிரத்தையாக சில நிமிடங்கள் கூட விடாமல் கேட்பதிலும் மிகுந்த ஆர்வமுடையவர். பின்நாட்களில், 80-களின் இறுதியில் கிரிக்கெட் தொடர்கள் டிவி-ல் நேரடி ஒளிபரப்ப ஆரம்பித்த காலம். முழு ஆட்டத்தையும் ஒவ்வொரு பந்து வீச்சையும், தன்னுடைய கற்பனையில் இருந்த ஆதர்ஷ நாயகர்களின் பந்து வீசும் திறனையும், அடித்து ஆடும் அழகையும் காணலாம் என்பது எவ்வளவு கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்கும் என்பது ரேடியோவிலேயே வர்ணனையை கேட்டு மூழ்கி இருந்தவர்களுக்கு, முதன் முதலில் டிவி-ல் பார்த்தவர்களுக்கு மட்டுமே அந்த பரவசம் புரியும். அது என் அண்ணன் போன்ற கிரிக்கெட் வெறியர்களுக்கு சொல்லவா வேண்டும். அவர் அதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என்பது, மற்ற வேலைகளையும் ஒற்றி வைத்து விட்டு இதை பார்க்கவேண்டும் என்ற வெறித்தனம் எவ்வளவு இருந்தது என்பது விவரிக்க தேவை இல்லை என்று நினைக்கிறன்.
என் பெரிய அண்ணன் சிறுவயதிலேயே அரசாங்க வேலை கிடைத்து அவரின் 22 வயதிலேயே வெளியூரில் தங்கி பணிசெய்ய வேண்டியிருந்தது. இவ்வொரு பண்டிகை தினங்களில், குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் நாட்கள் அவர் வீட்டிற்கு வருவார்.
நீண்ட இடைவெளி விட்டு பண்டிகை மற்றும் சில முக்கிய நிகழ்வுக்குளுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து செல்வதால், அண்ணன் வருகிறார் என்றால் எங்கள் அனைவருக்கும் இயல்பிலேயே ஒரு இனம்புரியாத பாசமுடன் கூடிய மகிழ்ச்சி இருக்கும், எப்பொழுது வருவார் என்று நாங்கள் நாட்களை எண்ணி ஆர்வமுடன் அவர் வருகையை எதிர்பார்க்க தொடங்கிவிடுவோம்.
சில சமயம் கிரிக்கெட் தொடர் சமயங்களில் நிச்சயம் அவர் வீட்டுக்கு வருவதை எதிர்பார்க்கலாம். அப்பொழுதெல்லாம் தனியரோ அல்லது அரசாங்க அலுவலர்களோ பணி விடுப்பு போட்டுவிட்டும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் ஏமாற்றி தங்கள் வீட்டிலோ, நண்பர்கள் வீட்டிலோ அல்லது டிவி விற்கும் கடைகளிலோ கிரிக்கெட்-ஐ பார்ப்பது வழக்கம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் எப்பொழுதெல்லாம் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் விளையாடுகிறதோ அன்றெல்லாம் இந்தியாவே மிகுந்த எதிர்பார்ப்போடும், எப்படியாவது இந்தியா பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என்று டிவி-முன் அமர்ந்து விடுவது வழக்கமாகவே இருந்தது.
சிலர் ஒரு படி மேல சென்று கோவில்களில் அர்ச்சனை செய்வதும், வீட்டில் பூஜை செய்வதும் என்று மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக ஒன்றியிருந்தார்கள்
உலக கோப்பை தொடர் அல்லது பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர் டூர் ஒன் டே மேட்ச் என்றால் இந்த குதூகுல மனநிலை எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் என் அம்மா உட்பட, காரணம் என் அண்ணன் விடுப்பில் வருவார் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக கிரிக்கெட் பார்ப்பார்கள் என்ற ஆசையே காரணம். அக்கால தின் பண்டங்களான வறுத்த வேர்க்கடலை, உப்பு கடலை, பொரியுடன் கலந்த காராசேவு அல்லது பஜ்ஜி போன்று எதோ ஒன்றை தின்றுகொண்டும், ஜாலியாக தரையில் படுத்துக்கொண்டும் விமர்சனம் செய்துகொண்டும், ஆதங்கப்பட்டுக்கொண்டும் டிவி-இல் கிரிக்கெட் பார்த்த நாட்கள் மறக்கமுடியாத நிகழ்வு.
என் அப்பா கவாஸ்கரை திட்டுவதும், என் அண்ணன் அசாருதீன் மற்றும் ஸ்ரீகாந்தை மெச்சுவதும், நாங்களோ மனீந்தர் சிங் மற்றும் கடைசியில் வரும் பேட்ஸ்மேன்-களை வேஸ்ட் என்றும், அவர்களால் சில பல ரன் எடுக்கவேண்டியிருந்தால் அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது என்று பொருமுவதும், ஆதங்கத்துடன் எப்படியாவது அடித்து ஆடுவார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பதும் வெகு சுவாரசியமாக இருக்கும்.
என் அப்பாவிற்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. வெகு இயல்பாக அவர் வீட்டில் புகை பிடித்துக்கொண்டிருப்பர் ஆனால் அப்பழக்கம் ஒருபோது அவரது குண நலன்களையோ அல்லது கடமையையோ பாதித்தது இல்லை. எங்களையும் அது எவ்விதத்திலும் பாதித்தது இல்லை.
இன்னும் சொல்ல போனால், வீட்டிற்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி வருவது போலவே, என் பள்ளி நாட்களில் நான் மற்றும் என் இளைய சகோதரரும் பல முறை சிகரெட்-ம் வெகு இயல்பாக வாங்கிவந்து கொடுத்திருக்கின்றோம்.
அந்த அளவிற்கு அவர் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருந்தார். நாங்களும் எந்த விகல்பமும் இல்லாமல் இருந்திருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.
அனால் இப்பொழுது அது சாத்தியமா? அதற்கு பல வண்ணங்கள் பூசி, எப்படி ஒரு தந்தையே தன் பிள்ளைகளிடம் சிகரெட் வாங்கிவர சொல்லலாம் என்றெல்லாம் உருட்டுவார்கள்.
நானோ என் இளைய சகோதரரே இன்று வரை சிகரெட் புகைப்பவர்கள் அல்ல.
அதே நேரத்தில், இன்றைய சமூக சூழ்நிலை, இளைஞர்களை தவறான பாதையில் செல்ல தூண்டும் சோஷியல் மீடியாவின் தாக்கம், முன்னெப்போதும் இல்லாத போதை கலாச்சாரம் மற்றும் தேவை இல்லாத நுகர்வு கலாச்சாரம் ஆகியவை உளவியல் ரீதியாக ஏற்படும் தாக்கங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்பொழுது இதை நிச்சயம் ஒதுக்கி தள்ள முடியாது. ஏனென்றால், இது அப்படியே எதிர்திசையில் செல்வதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.
எத்தனை சமாதான சொற்களை கூறினாலும், எவ்வளவு நியாயப்படுத்த முயன்றாலும், ஒருவரை அது ஆணோ, பெண்ணோ அவர்கள் நம்மை மிகவும் நேசிப்பவர்களாகவும், நம் நலம் விரும்பிகளாகவும் மற்றும் நம்மை சார்ந்து இருப்பவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களை உடல் ரீதியாகவோ இல்லாது மன ரீதியாகவோ எவ்விதத்திலும் என் சுயத்தின் காரணமாக அவர்களை துன்புறுத்துவது என்பது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.
அப்படிதான் என் ஆழ்மனதில் இருக்கிறது அதையே மற்றவர்களுக்கும் நான் போதித்திருக்கிறேன்.
பொதுவாகவே என்னை அனைவரும் மிகுந்த பொறுமையானவன், மென்மையானவன் என்றே வீட்டிலும், அலுவலகத்திலும் கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.
அனால் என்னுள் என்னை அறியா ஒரு கோபம் பீறிட்டுக்கொண்டு வருகிறது ஆனால் அது ஒரு சில குறிப்பிட்ட தருணங்களில் மட்டுமே வருகிறது. இதை நான் பலமுறை யோசித்ததுண்டு. எத்தனையோ புத்தகங்கள் படித்திருந்தாலும், எத்தனையோ உணர்வுசார், மனநல மற்றும் உளவியல் சம்பந்தமான எண்ணற்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு அதை என்ற வாழ்வில் கடைபிடித்து வந்தாலும் இது போன்ற ஓரிரு சந்தர்ப்பங்களில் எப்படி என்னை மறுக்கிறேன் என்பது இன்று வரை வியப்பாகவே இருக்கிறது.
நீண்ட ஆராய்தலுக்கு பிறகு நானறிந்த ரகசியம் கோபத்தை கட்டுக்குள் வைத்து அதை வெளிக்காட்டாமல் தவிர்க்கமுடியுமே தவிர கோபமே வருவதக்கன சூழ்நிலையை தவிர்க்கமுடியாது என்பதே. எனவே ஒன்று கோபத்தை வெளிக்காட்டிவிடுவது மற்றொன்று கோபத்தை வேளிக்காட்டாமல் தவிர்ப்பது என்பதே.
இதில் நம் கோபத்தை வெளிக்காட்டுவது என்பது இருவகை :
1. கோபத்தில் அடித்துவிடுவது - பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதும், சிறுவயதில் சகோதர சகோதரிகள் அடித்து கொள்வதும், பெரியவர்கள் மிக கடுமையாக அடித்துக்கொள்வதும் இதில் அடக்கம்.
2. வாய்மொழி துஷ்பிரயோகம் - உரத்த குரலில் மிக சத்தமாக கத்துவது (பெரும்பாலும் பெண்கள்), அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது (பெரும்பாலும் ஆண்கள், மனதளவில் பாதிப்படைந்தவர்கள் ), மனதை காயப்படுத்தும் வகையில் மிக அபாண்டமாக பேசுவது போன்று வாய்மொழி வசைபாடுகள்.
இதில் இயல்பில் மிக அமைதியானவர்களாக (இண்ட்ரோவெர்ட் ) அறியப்படுபவர்களின் ஆயுதம் முதல் வகையை சார்ந்தது. அவர்களுக்கு உரத்த குரலிலோ அல்லது தடாலடியாக அசிங்கமான வார்த்தைகளை வெளிப்படையாக கூறியோ தன் உட்சபட்ச கோபத்தை தணித்து கொள்ள தெரியாது.
ஆனால், இயல்பிலேயே (எக்ஸ்ட்ராவெர்ட்) உரக்க பேசுபவர்கள், அதிகமாக பேசுபவர்கள், தன் முனைப்பு, சுயம் பாதிப்பு என எண்ணுபவர்கள் எவ்விதமான சிறிய விஷயமாக இருந்தாலும் சட்டென தங்கள் கோபத்தை, மிரட்சியாகவும், மிக சத்தமாக பேசுவதிலும், எதிரில் இருப்பவர்களுக்கு எதை சொன்னால் பிடிக்காதோ அதை சொல்லி பிதற்றுவதுமாக தங்ககள் கோபத்தை தீர்க்க எண்ணுவார்கள்.
இந்த இரண்டு வகையான கோபத்தின் வெளிப்பாடும் தீமையானதே. இவ்விரண்டும் ஒன்றிற்கொன்று சளைத்தது அல்ல. இன்றைய நவீன உளவியல் உலகில் அடிப்பது போன்ற உடல் ரீதியிலான துன்புறுத்தலும், வாய்மொழி துஷ்பிரயோகம் மூலம் மன ரீதியிலான துன்புறுத்தலும் ஒன்றே. இதில் எது முதலில் தூண்டுதலாக இருக்கிறது என்பது முக்கியம்.
இதில் எது முதலில் தூண்டுதலாக இருக்கிறது என்பது முக்கியம். அதாவது வாய் வார்த்தைகளால் கைகலப்பு ஆகிறதா அல்லது கைகலப்புகளால் வார்த்தை துஷ்பிரயோகம் நாககிறதா என்பதே. அனால், 95%, வார்த்தை துஷ்பிரயோகத்திலேயே கைகலப்பு நடக்கிறதென்பது புள்ளிவிவரங்கள் கூறுகிறது, இது குடும்ப பிரச்சினையானாலும், வெளிவிவகார பிரச்சினை என்றாலும் வார்த்தை பிரயோகம் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பார் சொல்லிழுக்கு பட்டு
என்பது வள்ளுவர் வாக்கு.
நம் இந்திய கலாச்சாரத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்புடன், திட்டியும், சில சமயங்களில் அடித்தும் வளர்ப்பது என்பது மிக இயல்பான ஒன்று. அது போன்று கணவன் மனைவியிடமும் சகோதர சகோதரிகளும் இருக்கும் வீடுகளில் அடித்து கொள்வது பிறகு சேர்ந்து கொள்வது என்பது மிக சகஜம்.
பேசுவதற்குக் கற்றுக்கொடுக்கும் பெற்றோர், மெளனமாக இருப்பதற்குக் கற்றுத் தரவில்லையே ஏன்? மிக முக்கியமான உளவியல் கேள்வி. இன்றைய அவசர காலகட்டத்தில், நினைத்தவுடன் உலகின் எந்த மூலைக்கும், எப்படியும் பேச முடிகிற தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சுழலில், எதற்கும் காத்திருக்க வேண்டியிராத நிதானமற்ற சூழலில், பேச்சே பலருக்கும் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது.