என்னோட முப்பது வருட கேரியர் வாழ்க்கையையும், அதுல சுமார் இருபத்தாறு வருடங்களா நான் அனுபவிச்ச வெளியுலகப் பயணத்தையும், கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்த்தா, பல நேரங்கள்ல எனக்கே சில விஷயங்கள் ரொம்ப சுவாரசியமாகவும், சில விஷயங்கள் ஆச்சரியமாகவும், இன்னும் சில விஷயங்கள் எப்போதும் பிரமிப்பாகவும் இருக்கும்.
இதையெல்லாம் நான் என்னுடைய கல்லூரி நண்பர்கள் மற்றும் சக அலுவலக நண்பர்கள் பலரிடம் நிறைய பேசியிருக்கேன். அப்போதெல்லாம், "நீ உன்னோட இந்த அனுபவங்களை எல்லாம் ஒரு டாக்குமெண்ட்டா எழுதி வை டா” என்று நண்பர்களும், நம்ம கம்பெனி ப்ளாக்ல கண்டிப்பாக பதிவு பண்ணுங்கன்னு “ என்று சக அலுவலக நண்பர்கள் நிறைய பேர் என்கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க.
எனக்கும் எழுதறது பிடிக்கும். அதனால, அப்பப்போ தோணும்போதெல்லாம் சில விஷயங்களை எழுதி வைப்பேன். ஆனா, கொஞ்ச நாள் கழிச்சு அதைத் திரும்பிப் பார்க்கும்போது, "அப்படி என்ன நாம பெருசா சாதிச்சிட்டோம்? இதையெல்லாம் போய் பெருசா எழுதணுமா?"ன்னு தோணும். அப்படியே எழுதுறதை விட்டுடுவேன்.
மறுபடியும், எப்பவாவது யார்கிட்டயாவது பேசும்போது, அவங்க என்னோட பயண அனுபவங்களைப் பற்றி வியந்து பேசுவாங்க. அப்போ, "அட, ஆமா இல்ல! இது என்னோட தனிப்பட்ட அனுபவம். இது மாதிரியான சில நிகழ்வுகளும், பயண அனுபவங்களும் எல்லோருக்கும் அமைஞ்சிருக்காது. அப்படியிருக்கும்போது, இதை ஏன் எழுத்து வடிவத்தில் பதிவு பண்ணக்கூடாது?" -ன்னு தோணும்.
அதிலும், சிலர் குறிப்பிட்ட சில விஷயங்களைப் சுட்டிகாட்டி பேசும்போது, "இது ரொம்ப பெரிய விஷயம். நீ எப்படி இந்த முடிவு எடுத்த? இத எப்படி சமாளிச்ச?"ன்னு கேட்பாங்க. அப்போ, "சரி, இதையெல்லாம் நம்ம திருப்திக்காக வாவது எழுதித்தான் பார்ப்போமே" -ன்னு மறுபடியும் தோணும்.
அப்படித்தான், என்னோட பயணத்தைப் பின்னோக்கிப் பார்த்து எழுத ஆரம்பிச்சேன்.
எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், எதையும் குறுகிய காலத்துல கத்துக்க முடியும் என்கிற கற்றுக்கொள்ளும் ஆர்வமும் (Learning Attitude), இயல்பாகவே இருந்த திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் திறமை, எந்த வேலையா இருந்தாலும் அதை முழு மனசோட, என்னால முடிஞ்ச அளவுக்கு தரமாக செய்யணும்கிற உறுதி (Conviction to do my level best) — இவையெல்லாம் எப்படி என்னை இந்தப் பாதையிலே முன்னேறி செல்ல உதவியிருக்கிறது-ன்னு ஒரு சுய விமர்சனத்திற்கும், மற்றும் சுய மதிப்பீடுக்காகவும் இதை கட்டாயம் எழுத வேண்டும்-ன்னு தோணிச்சு.
இங்க நான் முக்கியமா சொல்ல விரும்புற ஒரு விஷயம் இருக்கு.
“என்னோட திறமை மேல நம்பிக்கை” அப்படின்னு மேலே சொல்லல, காரணம் எனக்கு கல்லூரி முடித்த ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு என்மேலே முழு நம்பிக்கை இருந்துச்சுன்னு சொல்ல முடியாது. உண்மையா சொல்லணும்னா, அதுக்கு நேர்மாறாத்தான் இருந்தது.
1993 காலகட்டத்துல காலேஜ் முடிச்ச நேரத்துல, கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதுவதில் எனக்கு நல்ல தியரி அறிவு இருந்துச்சு. Basic, FoxPro, C, C++ மற்றும் Assembly Language போன்ற அந்தக் காலத்துல பிரபலமா இருந்த புரோகிராமிங் லாங்குவேஜ்கள்ல திறமை இருந்துச்சு. அதோட மட்டும் இல்லாம, கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் (Computer Hardware) பற்றியும் ஓரளவுக்குத் தெரிஞ்சு வச்சிருந்தேன். கம்ப்யூட்டரைப் பிரித்து, அதுல என்ன பிரச்சினைன்னு கண்டுபிடிச்சு, அதைச் சரி பண்ற அளவுக்குத் தெரியும்.
ஆனா, இதெல்லாம் படிப்பு அறிவு மட்டுமே. அதாவது, தியரி அறிவு.
நடைமுறையில கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய அனுபவம் எனக்கு ரொம்ப ரொம்பக் குறைவு. அதுக்குக் காரணம், 1990 முதல் 1993 வரையிலான காலகட்டத்துல கம்ப்யூட்டர் பயன்பாடு இப்போ இருக்கிற அளவுக்கு பரவலா இல்லாததுதான்.
எங்கள் கல்லூரியில வெறும் ஏழு கம்ப்யூட்டர்கள் மட்டுமே இருந்துச்சு. அதையும் கம்ப்யூட்டர் பிராக்டிகல் வகுப்பு நேரத்துல மட்டும்தான் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
உண்மையிலேயே, காலேஜ் முடிச்சவுடன், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி எப்படி ஒரு புரோகிராமை நடைமுறையில உருவாக்குவது, அதை எப்படி ஒரு வேலையா மாற்றுவது என்கிற தெளிவான பார்வை எனக்கு இல்ல. அந்த நேரத்துல என் மேலேயே எனக்கு நம்பிக்கையும் இல்லாமதான் இருந்தேன்.
அப்படியிருக்கும்போது, இந்தக் குறையை எப்படி சமாளிச்சேன்? என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையிலிருந்து, அந்த நம்பிக்கையை எப்படி கொஞ்சம் கொஞ்சமா வளர்த்துக்கிட்டேன்?
அது ஒரு சுவாரசியமான கதை. அதைப் பிறகு விரிவா சொல்றேன்.
இப்படி எழுத ஆரம்பிச்சாலும், வேலைப்பளு காரணமா இந்த முயற்சி தொடர்ந்து தள்ளிப் போய்க்கிட்டே இருந்தது. அதுக்கு மேல, தமிழ்ல எழுதலாமா, ஆங்கிலத்துல எழுதலாமா என்ற குழப்பமும் இருந்தது.
உண்மையச் சொல்லணும்னா, ஆங்கிலத்துலதான் நான் நிறைய சின்னச் சின்ன குறிப்புகளா எழுதி வச்சிருந்தேன். ஆனா, அப்புறம் அதைத் திரும்பிப் படிச்சுப் பார்த்தப்போ, அது என்னோட அனுபவங்களை இயல்பா சொல்லுற ஒரு பதிவா இல்லாம, வெறும் தகவல் களஞ்சியமா மட்டுமே இருந்த மாதிரி தோணுச்சு.
என்னோட அனுபவங்களை, நான் எப்படி இயல்பா பேசுவேனோ, அதே மாதிரி ஒரு இயல்பான நடையோட எழுதினா எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பிச்சேன். அந்த முயற்சிதான் இந்தப் பதிவு.
இன்னொரு விஷயத்தையும் இங்க சொல்லணும்.
தமிழ்ல ஒரு வாக்கியத்தை உரைநடை பாணியில எழுதுறதைவிட, ஆங்கிலத்துல எழுதுறது எனக்கு ரொம்ப சுலபமா இருந்துச்சு. இன்னும் சொல்லப்போனா, பெரும்பாலான வாக்கியங்களை முதல்ல ஆங்கிலத்துல உருவாக்கிட்டு, அப்புறம் அதைப் பேச்சுத் தமிழ்ல இயல்பா எழுத முயற்சி பண்ணியிருக்கேன்.
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, என்னோட பணி நிமித்தமா தொடர்ந்து ஆங்கிலத்துல எழுதியும், யோசிச்சும் பழகியிருக்கேன். "Think in English" என்கிற இந்தப் பழக்கம், என்னோட இயல்பான சிந்தனை முறையிலேயே ஒரு பகுதியாக மாறியிருக்கு. அதனாலதான், தமிழ்ல எழுதும்போதும் முதல்ல ஆங்கிலத்துல யோசிக்கிற பழக்கம் வெளிப்படுது என்பதை என்னால நல்லா உணர முடிஞ்சது.
அதனால, இந்தப் பதிவு முழுக்க முழுக்கத் தூய தமிழ்ல இருக்காது. இயல்பா பேசுற தமிழோட, கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்டிருக்கும். என்னோட அனுபவங்களை என்னோட சொந்தக் குரல்ல, என்னால முடிஞ்ச அளவுக்கு இயல்பா பதிவு செய்யணும்கிற முயற்சிதான் இது.
இது ஒரு பெரிய சாதனைக் கதை இல்ல.
ஒரு கண்ணாடியில தெரியும் பிரதிபலிப்பு (Reflection) மாதிரி, என்னோட வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்து, அதிலிருந்து சில விஷயங்களை நினைவுகூர்ந்து, ரசித்து, புரிஞ்சுக்கிற (Cherish) ஒரு முயற்சி.
ஒரு சாதாரண மனிதனா, தேவையான சுயக்கட்டுப்பாடு (Self Discipline), எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் (learning attitude), நேர்மறை சிந்தனை (positive thinking), என்னால் முடியும் என்கிற சிறிது தைரியம், கடின உழைப்பைக் கொடுக்கத் தயங்காத மனநிலை (ready to work hard), பிரச்சனைகளை ஆராய்ந்து சிந்திக்கும் என் இயல்பான திறன் (Analytical Ability), சூழ்நிலையை சாதுர்யமாக கையாளுகிற திறமை — இவையெல்லாம் என் அலுவலக நண்பர்கள் அடிக்கடி நினைவு கூறுவார்கள். அதனால தான் சரி எப்படி இந்த சில குணாதிசயங்கள் என்னை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்கு என்பதைப் பின்னோக்கிப் பார்த்து அசை போடுற ஒரு முயற்சி.
அதே நேரத்துல, இந்தப் பயணத்துல நான் சந்திச்ச புதிய மனிதர்கள், நண்பர்கள், அவங்களோட ஏற்பட்ட அனுபவங்கள், வெற்றிகள்ல இருந்தும் தோல்விகள்ல இருந்தும் கத்துக்கிட்ட பாடங்கள் — இவையெல்லாத்தையும் பதிவு பண்ணணும்னு நினைக்கிறேன்.
அவ்வளவுதான்.
இது என்னோட வாழ்க்கைப் பயணத்தில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துக்கிறதுக்காக மட்டுமே.
நீங்க இதைப் படிக்கும்போது, உங்க வாழ்க்கையோட ஏதாவது ஒரு பகுதி இதுல உங்களுக்குத் தெரிஞ்சா, ஏதாவது ஒரு அனுபவம் உங்களுக்கு நினைவுக்கு வந்தா, அல்லது ஏதாவது ஒரு விஷயம் உங்களைச் சிந்திக்க வச்சா, அதுவே இந்த முயற்சியோட வெற்றி.
என்னோட அனுபவங்கள்ல உங்களுக்கான ஏதாவது ஒரு சிறிய அர்த்தம் கிடைச்சா, அதைவிட இந்தப் பதிவுக்கு வேற என்ன பெரிய நோக்கம் இருக்க முடியும்?
அதுவே போதும்.
என்ன
எனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் அனைவரின் பெரும் வேண்டுகோளின் பேரில் எனது வெளிநாட்டுப் பணி/பயண (on deputation) அனுபவத்திலிருந்து தொடங்குகிறேன், எனவே என் முதல் வெளிநாட்டு பயணம் துருக்கியிலிருந்து என் முதல் அத்தியாயத்தை துவங்குகிறேன்.